உலகநாயகன் கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல் அவர்களின் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இன்று இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் சிலையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து திறந்தனர்.

இவ்விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, ‘கமல் அவர்களின் கலையுலக தகப்பனார் மற்றும் என்னுடைய குருவான ஐயா கே.பாலசந்தர் அவர்களின் உருவ சிலையை ராஜ்கமல் தயாரிப்பு அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் நண்பர் கமல். அழகான, பிரம்மாண்டமான அலுவலகம். நடிகர் கமல் அரசியல் வந்தால் கூட தாய் வீடான சினிமாவை என்றும் விடமாட்டார். உலகநாயகன் கமலுக்கு கலை தான் உயிர், எங்கு சென்றால் அதை அவர் மறக்கமாட்டார். 

ராஜ்கமல் தயாரிப்பில் உருவான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள் படம்தான். இப்படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து உடனே கமல் வீட்டிற்கு சென்று அவரை எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர்கள் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு திரைக்காவியம். கமல் அவர்கள் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார்! 

எனக்கு போர் அடித்தால் அடிக்கடி ஆங்கில படமான காட்பாதர், சிவாஜி அவர்களின் திருவிளையாடல், ஹேராம் படங்களை தான் பார்ப்பேன். நான் இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன். 

ஐயா கே.பாலசந்தர் அவர்களின் சிலையை திறந்தவுடன் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பெரிய மகான் இன்று நம்முடன் இல்லை. சிலையை பார்க்கும் போது பாலச்சந்தர் அவர்களுடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது. 

என்னிடம் தமிழ் மட்டும் கற்றுக் கொள். உன்னை சினிமாவில் எங்கு கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார் என்று ஐயா கே.பாலசந்தர் அவர்கள் என்னிடம் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை உலகநாயகன் கமல். அவர் மீது அபார பிரியம் உண்டு, தூரத்தில் இருந்து கமலை எப்போதும் ரசித்துக் கொண்டே இருப்பார்’ என்று இவ்விழாவில் பேசினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 


Latest News