விழித்திரு ! விலகியிரு ! வீட்டிலிரு - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

கோரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு மிக துரிதமாக செயல்படுகின்றனர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சிறப்பான செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மக்களிடையே உரையாற்றினார். அதில் "அரசு மட்டும் நடவடிக்கை எடுத்ததால் போதாது; உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். தனிமைப்படுத்துதல் என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத் தான். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதனை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ உள்ளாட்சி அமைப்புக்கோ, சுகாதார துறைக்கோ, காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்கவும்.

கடுமையான சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரையோ அல்லது அரசு மருத்துவமனையையோ அணுகவும். தேவைப்பட்டால் அரசு உதவி மைய எண்கள் 104 (அ) 1077-ஐ தொடர்பு கொள்ளவும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் வெளியில் வரும்போது ஒருவருக்கொருவர் கட்டாயம் 3 அடி இடைவெளி விட்டு, சமூக இடைவெளியை கடைபிடிப்போம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் முன்பு, நம் பாரம்பரிய வழக்கப்படி கை, கால், முகத்தை சோப்பு போட்டு கழுவுங்கள். இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொள்ளுங்கள்.

முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், சமுதாயத்தையும் காப்போம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், இறைச்சி, மருந்துகள் மற்றும் மளிகை பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுங்கள். கூட்டம் கூடுவதை தவிர்த்திடுங்கள். கை குலுக்குவதை தவிர்த்து, கை கூப்பி வணங்கம் சொல்லுங்கள். விழித்திரு ! விலகி இரு ! வீட்டிலிரு" என கூறியுள்ளார் .

Latest News