உலகநாயகன் கமல் ஸ்டைலில் அவருக்கு வாழ்த்து! – தமிழ்புலவர் ஹர்பஜன் சிங்க் ட்வீட்!

V4U MEDIA [ Fri, Nov 08, 2019 ]

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அவரது ஸ்டைலிலேயே தன்னுடைய பிறந்தநாள் நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் நேற்று உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி சினிமா பிரபலங்களும் நடிகர் கமல்ஹாசனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வரிசையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கிரிக்கெட் ரசிகர்களால் தமிழ் புலவர் என உரிமையுடன் அழைக்கப்படுபவருமான ஹர்பஜன் சிங் நடிகர் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான முறையில் ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவுகளில் பெரும்பாலும் கோர்வையான மற்றும் புதிரான வார்த்தைகளை உபயோகிப்பார். பலர் அவரின் பதிவு புரியாமல் குழம்பி போவதும் உண்டு. தற்போது அதே பாணியில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வாழ்த்து எழுதியுள்ளார். 

”சினிமா என்னும் துறவை
 துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி!

உலகநாயகன் கமல் சார் நான் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ஹர்பஜன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்டுகள் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது இந்த பதிவும் வைரலாகியுள்ளது.