மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பல வருடங்களாக மண் பொம்மைகள், சிலைகள் வியாபாரம் செய்து, அங்கேயே குடில் அமைத்து வசித்து வருகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கும் வழியில்லாமல், சொந்த ஊர் செல்லவும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இவர்களின் நிலை பற்றி அறிந்த, மதுரை மாப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 100 கிலோ கோதுமை மாவு, 50 கிலோ உருளை கிழங்கு, 20 லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்கி உள்ளனர்.
இது குறித்து பேசிய அவர்கள், “கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி உதவலாம் எனும் நோக்கத்தில் துவங்கினோம். தினமும் 100 முதல் 150 நபர்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தோம். ராஜஸ்தானை சேர்ந்த 70 பேர் குடும்பத்துடன் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக கேள்விப்பட்டு வந்து இவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், அரிசி உணவு சாப்பிடுவதில்லை எனவே கோதுமை மாவு, உருளை கிழங்கு, எண்ணெய் கொடுங்கள் என கேட்டனர். எனவே, அவைகளை வாங்கி வந்து அளித்துள்ளோம். முன்பு 50 – 100 பேருக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தோம். இப்போது மாப்பாளையம் பகுதியை சேர்ந்த மேலும் பல நண்பர்களும் இணைந்து கொண்டதால் நாங்கள் 200-300 பேருக்கு விநியோகம் செய்து வருகிறோம். இது எங்களுக்கு மன நிறைவை தருகிறது” என்றனர்.