சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு மொபைல் விளையாட்டு தான் பப்ஜி. நேரம் காலம் தெரியாமல் அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்தனர் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில், இந்தியா- சீனா எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், சீன நாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதனால் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.
இதேபோல், பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. பப்ஜிக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆன்லைன் விளையாட்டு பிரியர்கள் வேதனை அடைந்தனர். பப்ஜி லைட் மூலம் சிலர் அந்த விளையாட்டை விளையாட்டி வந்த நிலையில், இந்த சேவையும் கடந்த மாதத்தோடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பப்ஜி பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பப்ஜி கேம்-ஐ உருவாக்கிய தென் கொரியாவின் கிராஃப்டன் நிறுவனம் இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி விளையாட்டை புதிய பெயரில் உருவாக்கியுள்ளது.
பாட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற புதிய பெயரில் அறிமுகமாகவுள்ள இந்த விளையாட்டுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதல் ஏராளமாள பப்ஜி பிரியர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். விரைவில் இந்த விளையாட்டு செயலி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.