பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதுகிறது.
இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. கோர்ட் தீர்ப்பை அடுத்து அங்குள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இதனையடுத்து மோதல் ஏற்பட்டு பெரிய சண்டையில் முடிந்தது.
இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலில் காசாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர், இதில் 61 குழந்தைகள் 35 பெண்கள், 16 முதியோர் பலியாகினர். சுமார் 1,400 பேர் பலத்தக் காயமடைந்தனர் என்று காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து காசா மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் மீது நடத்திய 11 நாள் குண்டு வீச்சுத் தாக்குதல் பிரமாதமான சக்சஸ் என்று வர்ணித்துள்ளார். மொத்தம் 243 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேதன்யாகு கூறும்போது, “இஸ்ரேல் காசாவில் 200 பயங்கரவாதிகளையும், 25 சீனியர் கமாண்டர்களையும் கொன்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், “பல மாதங்கள், ஆண்டுகள் தயாரித்த திட்டத்தின் படி நடந்தது” என்றார்.