ஜப்பான் நாட்டிலும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் சுமார் 83368 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மேற்கோள் காட்டி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும் என ஜப்பான் நாட்டின் மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மறுபக்கம் பாதுகாப்பான முறையில் போட்டிகளை திட்டமிட்டப்படி நடத்தலாம் என்கிறது ஒலிம்பிக் ஒருங்கிணைத்து நடத்தும் குழுவினர்.
இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த தேதியில் ஆரம்பமாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 என்ற பெயரில் ஒலிம்பிக் ஈவண்ட் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பங்கேற்கும் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளின் அழுத்தம் காரணமாக ஜப்பான் – டோக்கியோவில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்தது.
வரும் ஜூன் மாதத்தின் இறுதி வரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளதாம். அதனால் இப்போது அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.