இந்தியாவில் கொரோனா இதுவரை இல்லாத அளவு உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒரு நாளின் பாதிப்பு அளவு மூன்று லட்சத்தைத் தாண்டுகிறது. இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளே கடைசி வரை நடைபெற்று முடியுமா எனத் தெரியவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துவது கேள்விக்குட்பட்ட விஷயம்தான்.
கொரோனாவின் பாதிப்பு குறையாமல் இந்தியாவில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்தாலும் அதில் மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. இதனால், போட்டியை வேறு நாடுகள் நடத்தும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், போட்டியை இந்தியாதான் நடத்தும் என ஐசிசி தெரிவித்துவிட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், சென்ற வருட ஐபிஎல் போல அரபு நாடுகளில் டி20 உலகக்கோப்பைப் போட்டியை நடத்த வாய்ப்பிருப்பதாக பிசிசிஐ மேலாளர் தீரஜ் மல்கோத்ரா தெரிவித்திருக்கிறார். போட்டிகள் அரபு நாடுகளில் நடந்தாலும், இந்தியாவே அதனை நடத்தும் எனவும் தீரஜ் மல்கோத்ரா தெரிவித்திருக்கிறார்
உறுதியான முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை. உலகக் கோப்பை நடக்க இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், அப்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.