அக்டோபரில், டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தியாவில் தான் இத்தொடர் நடத்தப்பட உள்ளது. ஆனால், இந்தியாவின் தற்போதையை நிலையில் உலகக் கோப்பைக்கும் வாய்ப்பில்லை என்பதால், ஒட்டுமொத்த போட்டிகளையும் அமீரகத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால், மீதமிருக்கும் 31 ஐபிஎல் போட்டிகளையும், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நடத்தலாமா, அல்லது அதற்கு பின் நடத்தலாமா என்பதில் இழுபறி நீடிக்கிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு முன் நடத்த வேண்டுமெனில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணி சவாலானதாக இருக்கும். முக்கிய அணிகளுக்கு அடுத்தடுத்து தொடர்கள் இருப்பதால், சர்வதேச போட்டிகளை ஒதுக்கிவிட்டு, அந்தந்த நிர்வாகங்கள் ஐபிஎல்-லுக்கு வீரர்களை அனுப்புமா? என்பது பெரும் சந்தேகமே.
இந்த நிலையில், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், தனது ஆல் டைம் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். அதில், ஜோஸ் பட்லர், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி (WK), பொல்லார்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜோஸ் பட்லர் லிஸ்டில், மிஸ்டர்.ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. தொடரில் இதுவரை 5,491 ரன்கள் குவித்துள்ள ரெய்னா தான், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் ரெய்னா ஒரு பெஸ்ட் ஃபீல்டரும் கூட. ஸ்டிரைக் ரேட், ஆவரேஜ், ரன்கள் என அனைத்திலும் டாப் லிஸ்டில் ஒருவராக இருக்கும் ரெய்னாவுக்கே ஆல் டைம் அணியில் இடமில்லை ‘யுனிவர்சல் பாஸ்’ என்றழைக்கப்படும் க்றிஸ் கெயிலுக்கும் அணியில் இடமில்லை