Fabulous Four-ல் ஒருவர், பேக் ஃபுட் ஷாட்களின் சாகசக்காரர், நான்காம் இன்னிங்ஸின் நாயகன் என இவரது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் அடைமொழிகள் பல உண்டு. எனினும் இவரது இயல்பை இன்னமும் தெளிவாகக் குறிக்கும் வார்த்தை, ‘ஆபத்பாந்தவன்’. எப்பொழுதெல்லாம், இவரைச் சார்ந்த அணி நெருக்கடியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம், அதனை மீட்க ஒற்றை மனிதனாகப் போராடும் போராளிதான், கேன் வில்லியம்சன். ஆடுவது டெஸ்ட் போட்டியோ, ஒருநாள் போட்டியோ, டி20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், தனது தனித்துவத்தால், வியத்தகு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார் வில்லியம்சன். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக மட்டும் ஒரு போராட்டமான இன்னிங்ஸை ஆடிவிடவில்லை, அவரின் பெரும்பாலான கிரிக்கெட் நாள்கள் முழுவதும் தன்னந்தனிப் போராட்டம் நிறைந்ததே! உலகக் கிரிக்கெட் அரங்கில், தனிஒருவனாக, அணிக்காக அவர் அரங்கேற்றிய ‘ஒன் மேன் ஷோ’ களக்காட்சிகளில் ஒருசில இங்கே!
முடிந்த அளவுக்கு, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார். ஸ்பின் பௌலிங்கைக் குறிவைத்துத் தாக்கி ரன்களைச் சேர்த்தார். பில்டப் ஆன பிரஸரை, பௌலர்கள் பக்கமே திருப்பிவிட்டார். பிட்ச் மிகவும் ஸ்லோ ஆனதால், பந்து பேட்டுக்குவர மிகத் தாமதமானதால், பேக்ஃபுட் ஷாட்டுகளை ஆடி, அதனை மிக அழகாகச் சமாளித்தார் வில்லியம்சன். ஸ்லோ டிராக்கில், சேஸிங் செய்யும்போது பேட்டிங் செய்வதற்கான ஒன்றரை மணிநேர சிறப்பு ஷார்ட்டைம் கோர்ஸ் போலத்தான் அது இருந்தது.