சட்டசபை தேர்தலில் ம.நீ.ம ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில், வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்தபோதும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1358 வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார் கமல்ஹாசன்.
நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், எம். முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே. குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் மகேந்திரனும் ராஜினாமா செய்தார். பின்னர் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பத்மபிரியாவும் கட்சியிலிருந்து வெளியேறினார்.
2019 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சி.கே.குமரவேல் விலகினார். ஆனால் பின் மீண்டும் சில மாதங்களிலேயே மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். இந்த நிலையில்தான், அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்தத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் குமரவேலுக்கு ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் சி.கே.குமரவேல்.
இதுகுறித்து குமாரவேல் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் குளறுபடிகள் நிறைய நடந்தது. சந்தோஷ் பாபு, மகேந்திரன், நான் என பலரும் ஒரு கட்சியில் இருந்து விலகுகிறோம் என்றால் அதன் காரணம் வலுவாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். 233 தொகுதிகளில் தோற்றால் பரவாயில்லை ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்று ஒரு தலைவர் நினைத்தால், தலைவர் என்ற பொறுப்பை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்.
2019ம் ஆண்டு நான் கட்சியை விட்டு வெளியேறியபோது நான் மூன்றாவது கட்ட இடத்தில் இருந்தேன். எனக்கு கமல்ஹாசனுடன் எந்த ஆதங்கமும் அப்போது கிடையாது. அவருடன் நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்தான் அப்போது இருந்தது. ஆனால் நான் இப்போது முதல்கட்ட நிர்வாகியாக இருக்கிறேன். எனவே, கமல்ஹாசன்தான் இந்த மோசமான முடிவுகளுக்கு காரணம் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால்தான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.