சென்னையில் ஆதரவற்றோர் பலர் தெருக்களையே வீடுகளாக கொண்டு வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது. அதே போல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளதால், உணவுக்காக சிரமப்பட்டு வருவதை உணர்ந்த புதுக்கல்லூரி மாணவர்கள் இவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். இதன் மூலம் தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை புதுக்கல்லூரி வாயிலில் சிக்கன் பிரியாணி பொட்டலங்களை கட்டி விநியோகித்து வருகின்றனர். பசி போக்க நினைக்கும் யாரும் அங்கு சென்று தனக்கு தேவையான உணவு பொட்டலத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஊரடங்கு தொடங்கிய முதல் நாளில் 15 உணவு பொட்டலங்களை மட்டுமே வழங்கி வந்த மாணவர்கள், தற்போது முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் உதவியுடன் தற்போது 400 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இதுக்குறித்து புதுக்கல்லூரி மாணவர் சங்க தலைவர் முஹம்மத் முக்தார் கூறுகையில், சுமார் பத்து நாளாக ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து “பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் பணம் வேண்டாம்”என்ற பெயரில் இலவசமாக உணவை வழங்கி வருகிறோம்.
வெறும் மாஸ்க்கை மட்டும் அணிந்து கொள்ளாமல் PPE-KIT அணிந்து மிகப் பாதுகாப்பாக தொண்டாற்றி வருகின்றனர், ஆரம்பத்தில் வெறும் பதினைந்து உணவு பொட்டலங்களை கொடுப்பதாக ஆரம்பித்த இந்த முன்னெடுப்பு இன்று நாளுக்கு 400 பொட்டலங்கள் மக்களுக்கு கொடுத்து வருகின்றோம்.