இஸ்ரேலியர்கள்- பாலஸ்தீனர்கள் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக வன்முறையாக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி காசா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வெளி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல் ஜசீரா, அசோசியேட் பிரஸ் ஆகிய ஊடகங்கள் செயல்பட்டு வந்த கட்டிடமும் வான்வெளி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் இன்று 7வது நாளாக தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும் தாக்குதலில் 57 குழந்தைகள் உட்பட 180 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், தேவைக்கேற்ப தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு இன்று கூடும் என பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அறிவித்திருக்கிறார். இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். காசா நகர் மீது நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.