இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கிழக்கு ஜெருசலேம் யாருக்கு சொந்தம்? என்பதில் பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. 1967ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், பாலஸ்தீனியர்கள் இன்றளவும் ஜெருசலேம் நகரை தங்கள் தலைநகராக கருதி வருகின்றனர். அங்கிருக்கும் மசூதியில் ரமலான் நோன்பையும் இஸ்லாமியர்கள் கடைபிடிகின்றனர்.
இந்த ஆண்டும் அவர்கள் வழக்கம்போல் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேல் காவல்துறையினர், பாலஸ்தீனிய இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து, தாக்குதலையும் நடத்தியது. இந்த தாக்குதல் இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்ததால், எப்போது வேண்டுமானாலும், இஸ்ரேல் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
எதிர்பார்த்தை போலவே ஹமாஸ் அமைப்பின் காசா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில்கேரளாவைச் சேர்ந்த செவிலியர் மற்றும் 9 குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். ஜெருசலேம் நகரிலும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பல காணொளிகள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது வான்வழித் தாக்குதலின் நேரலை வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.