இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பதவியேற்றிருக்கிறார் ரமேஷ் பொவார். மீண்டும்! கடந்த இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிவந்த டபுள்யு.வி.ராமன் தேர்வு செய்யப்படாதது, பயிற்சியாளர் தேர்வின்போது தனக்கு எதிராக பொய் பிரசாரம் நடந்திருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் டிராவிட் இருவருக்கும் அவர் கடிதம் எழுப்பியிருப்பது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
2018-ம் ஆண்டின் இறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார் முன்னாள் தமிழக வீரர் டபுள்யு.வி.ராமன். அவரது பயிற்சியின்கீழ் 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, 10 போட்டிகளில் வென்றது. 28 டி-20 போட்டிகளில் பதினைந்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது இந்தியா.
உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அணியின் அணுகுமுறையிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. 16 வயதேயான ஷெஃபாலி வர்மா, ரிச்சா கோஷ் போன்றவர்களோடு, ஹர்லீன் தியோல், சிம்ரன் பஹதுர் எனப் பல இளம் வீராங்கனைகள் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள். நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் டபுள்யு.வி.ராமன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலிக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “என் பயிற்சி முறைகள் சிறப்பாக இல்லாததால் நான் அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்படாமல் இருந்தால் பரவாயில்லை. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வேறு ஏதேனும் காரணங்களால் நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நினைக்கும்போது சற்று கவலையாக இருக்கிறது. குறிப்பாக, அணியின் நலனுக்குப் பதிலாகத் தங்களின் சொந்த நலன்களைப் பிரதானப்படுத்துபவர்களின் குற்றச்சாட்டுகளால் அது நடந்திருக்கலாம் என்பது இன்னும் வேதனையளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து முன்னாள் பயிற்சியாளர் பூர்ணிமா ராவும் தன் கருதுகளைப் பகிர்ந்திருக்கிறார். “டபுள்யு.வி.ராமன் சீக்கிரம் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறுவார் என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்லியிருக்கும் அவர், யாரும் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் ரமேஷ் பொவாரும் சீக்கிரம் வெளியேறக்கூடும் என்று சொல்லியிருக்கிறார். “நான் பயிற்சியாளர் ஆனபோது வீராங்கனைகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையானவர்களாக, அப்பாவிகளாக, அற்புதமானவர்களாகவே இருந்தார்கள். ஆனால், சில வெற்றிகள், பிசிசிஐ ஒப்பந்தம், பிக்பேஷ் வாய்ப்பு, மீடியா வெளிச்சம், சோஷியல் மீடியா வளர்ச்சி, கேப்டன்சி சர்ச்சை எல்லாம் சூழ்நிலையை மாற்றிவிட்டது. அவர்களால் வெற்றியையும், பணத்தையும் கையாள முடியவில்லை” என்று கூறியிருக்கிறார் பூர்ணிமா ராவ்.
“அணிக்குள் டீம் கலாசாரம்” இல்லை என்று டபுள்யு.வி.ராமன் சொல்லியிருப்பது உண்மை என்று நன்றாகவே புரிகிறது. மகளிர் கிரிக்கெட் இங்கு பிரபலமாக நிச்சயம் ஸ்டார்கள் உருவாகவேண்டும். கொண்டாடப்படவேண்டும். ஆனால், அதுவே ஸ்டார் கலாசாரமாக மாறினால் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவிடும். இதோ, பயிற்சியாளர் மாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.