ராகுல் திராவிட் ஜூலை மாதம் இலங்கை செல்லவிருக்கும் இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராகிறார்.
ரவி சாஸ்திரி இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியுடன் இருப்பார் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மெதுவே ரவிசாஸ்திரி இடத்துக்கும் ராகுல் திராவிட் வரலாம் என்பதற்கான அறிகுறியாக இது கிரிக்கெட் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை மாதம் இலங்கைக்குப் பயணிக்கும் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது, இதில் மூத்த வீரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், பிரிதிவி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், போன்ற இளம் வீரர்களுக்கு தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.
இந்திய சீனியர் அணியின் பிரமாதமான வெற்றிகளுக்கு இந்தியா ஏ மற்றும் இந்தியா யு-19 வீரர்கள் படையிலிருந்து தொடர்ச்சியாக தன் பயிலரங்கில் பட்டைத் தீட்டி வைரமாக இந்திய அணிக்கு அனுப்புவதில் ராகுல் திராவிட் சிறந்து விளங்குகிறார்.
இன்றைய இந்திய அணியின் பெஞ்ச் வலுவிற்கு ராகுல் திரவிட் தான் காரணம் என்று ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.