பல நூற்றாண்டுகளாக உலகம் கண்ட அதே கதைதான். உலகின்மீது ஆதிக்கம் செலுத்த இரண்டு ராஜாக்களுக்கு சண்டை. பனிப் பிரதேசத்தில் பிறந்த அந்த மாயக்கார மன்னன் பலரால் கடவுளாகவே பார்க்கப்பட்டான்.
இன்னொரு அரசனோ, அந்நாட்டின் பெயர்போன காளையைப்போல் விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டே இருப்பான். கடவுளுக்கும் காளைக்குமான சண்டை அதுவரை உலகமே கண்டிடாத ஒன்று!
இருவரும் மாறி மாறி வென்றுகொண்டே இருந்தார்கள். புல்தரையில் நடக்கும் போர்களில் மாயக்காரனைக் கட்டுப்படுத்துவது அசாத்தியமாக இருந்தது. களிமண் தரைகளோ அந்த முரட்டுக் காளைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. அங்கு நடந்த போர்களில் வாகை சூடிக்கொண்டே இருந்தான். உலகின் ஒரு பாதி அந்த ஸ்விட்சர்லாந்தின் மாயக்காரனுக்கும், மறுபாதி ஸ்பானிஷ் மெஷினுக்கும் ஆதரவுக்குரல் எழுப்பியது. இருவரும் நிகழ்காலத்தை ஆட்சிபுரிந்தார்கள். வரலாறை மாற்றி எழுதினார்கள். எதிர்காலத்தைத் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தார்கள்.
இரு வேறு கொடிகள் பறந்த யுத்த களத்தில் புதிதாய் ஒரு சங்கு முழங்கியது. இரு கொடிகளுக்கும் மேலே புதியதோர் கொடி பறக்கத் தொடங்கியது. இரண்டு ராஜ்ஜியமும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பிடியை இழந்தன. உலகம் அதுவரை கண்டிராத, நினைத்தும்கூடப் பார்த்திடாத மும்முனைப் போரை எதிர்கொண்டது. கடவுளின் மாயங்களையும், காளையின் உறுதியையும் இந்தப் புதியவன் அசராமல் எதிர்கொண்டான். புற்தரைகளில் மாயக்காரன் வீழ்ந்தான். எதற்கும் அசராத அந்த முரட்டுக் காளை இவன் முன் சற்றே தடுமாறியது. நோவக் ஜோகோவிச் – ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் எனும் இரு மாவீரர்களுக்கு மத்தியில் புதியதோர் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார்.
ஃபெடரர் தன் அட்டாக்கிங் ஆட்டத்தால் எவரையும் நிலைகுலையச் செய்பவர். நடால் – தன் ஃபோர்ஹேண்டால் மகத்தான மதில்களையே உடைத்துவிடக்கூடியவர். இந்த அரக்கர்களை அட்டாக் செய்யாமல் தடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், ஜோகோவிச், இவர்கள் அவ்வளவு எளிதில் ஊடுருவிட முடியாத ஓர் அரண் அமைத்தார். களத்தின் எந்த மூளைக்குச் சென்றாலும் பந்து எதிர்முனைக்குத் திரும்பிவிடும். யாரும் எட்ட முடியாத இடத்துக்கு பந்தை அனுப்பிவிட்டதாக எண்ணி எதிராளி ஆசுவாசப்படலாம். ஆனால், சென்ற வேகத்தில் அந்தப் பந்து திரும்பிவந்துகொண்டிருக்கும். நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் நடந்துகொண்டிருக்கும் போட்டியாக இருந்தாலும், ஒவ்வொரு பந்தும் எதிர்முனைக்குச் சென்றுகொண்டே இருக்கும். தூரம், வேகம், சோர்வு என எதுவும் அவரைத் தடுத்திடாது.